நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

0
29

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில், உடல்கள் கிடைக்காததால் பல உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை அவர்களை காணாமல் போனவர்கள் என்றே நேபாள அரசு கூறி வருகிறது.

உயிரிழப்புகள் தொடர்பாக நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247. காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 591.

நேபாள நீர்மின் திட்டங்களில் 933 பேர் சிக்கியிருக்க வாய்ப்பு:

நேபாளத்தின் 6 நீர்மின் திட்டங்களில் 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் பலேந்திர ஷா தகவல்:

நேபாளம் கற்பனை செய்ய முடியாத பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்துள்ளார். “போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், இழந்த உயிர்களையும் சொத்துக்களையும் உள்கட்டமைப்புகளையும் முழுமையாக கணக்கிடுவதை மிகவும் கடினமாக்கியுள்ளது.

மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு, தொடர்ச்சியான அபாயங்கள் காரணமாக இந்த பணி சவாலாக இருந்தாலும் குடிமக்களின் உயிர்களைப் பாதுகாக்க நாங்கள் உறதியுடன் முன்னேறி வருகிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:

நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்பு பணிகள் குறித்துப் பேசிய அவர், “இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரை தற்போது வரை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக நேபாளம் சென்ற 34 தமிழர்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன. அவர்களின் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்கள் குறித்து தகவலறிய விரும்புபவர்கள், அரசு உதவி எண்களை தொடர்புகொள்ளலாம். நேபாளம் மட்டுமின்றி திபெத் மற்றும் சீனாவுடனும் மத்திய அரசு ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புகொள்ள முடியாத 84 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் சிறப்புக் குழு:

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிய காத்மாண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு காத்மாண்டுவில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாட்டை சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு, புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 84 பயணிகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில விவரங்களை https://udb.nepalpolice.gov.np/disaster என்ற தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேபாள காவல்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களை அறிய புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையை, 92895 16712 (Whatsapp / Call), 98685 30776 (Mobile No.) என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இது தொடர்பாக நேபாளத்துக்குச் செல்லும் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசின் மூன்று அலுவலர்கள் கொண்ட குழு காத்மண்டுவில் முகாமிட்டுள்ளது.ஏ. சத்திய சிவம் (Mob No. 9868207259), பி. தினேஷ் கண்ணன் (Mob No. 9868530799), எஸ். அஜய் (Mob No. 9868224049) ஆகிய மூன்று அலுவலர்கள் காத்மாண்டுவிலிருந்து தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவின் 262 பேர் சிக்கித் தவிப்பு:

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்தில் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த 262 பேர் சிக்கி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘திங்கள்கிழமை காலை நிலவரப்படி நேபாளம் மற்றும் சீனாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 262 பேர் சிக்கியுள்ளனர். அதேநேரத்தில், 144 பேர் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 கன்னடர்களை காணவில்லை:

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கிய கர்நாடகாவைச் சேர்ந்த 13 பேரை காணவில்லை என்று அம்மாநில முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேபாளத்தில் சிக்கியுள்ள கன்னடர்களை தொடர்பு கொள்ள நாங்கள் ஒரு குழுவை அனுப்பியுள்ளோம். 13 பேர் கொண்ட ஒரு குழு மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை. மற்ற அனைவரும் கண்டறியப்பட்டுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here