நுவாகோட்டில் உள்ள தேவிகாட் என்ற ஆற்றங்கரை நகரத்தில் இருந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தை பெருவெள்ளம் தாக்கியது. வெள்ளம் வருவதை அறிந்து ஒரு சிலர் உயரமான பகுதிக்கு சென்று உயிர் தப்பினர். அதே நேரத்தில் 7 முதியவர்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே, முதியோர் பாரமரிப்பு இல்லத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் தன்னார்வலர்கள் அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 91 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டியை போராடி மீட்டனர். மீட்கப்பட்ட குணா மாயா போஹரா சேறு படிந்த நிலையில் ஜேசிபி இயந்திரத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதுடன், பெரும் துயரிலும் போராடி உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கையின் முகமாக அவர் மாறினார்.
அவர் உள்பட முதியோர் பராமரிப்பு இலத்தில் உயிர் தப்பிய முதியவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாள பெருவெள்ளத்திலிருந்து உயிர் தப்பிய குணா மாயா போஹரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெள்ளம் வந்தபோது நான் தரைத்தளத்தில் உள்ள எனது அறையில் இருந்தேன். ஏற்கெனவே எனக்கு கால்களில் ஊனம் இருக்கும் நிலையில், வெள்ளப் பெருக்கினால் கைகளில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் உயிர் வாழ வேண்டும் என்ற மன உறுதியுடன் மரணத்தை எதிர்த்து போராடினேன்.
அறையின் ஜன்னலைத் திறந்து, எனது தலையை நீர் மட்டத்திற்கு மேலே வெளியே வைத்தேன். 2-3 மணி நேரத்திற்கு தலையை தண்ணீருக்கு மேலே நீட்டியவாறே இருந்தேன். உள்ளூர் தன்னார்வலர்கள் வந்து என்னை மீட்டனர்” என்றார்.
