குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயிலை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநில்ம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரூ.1,542 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக நாட்டின் முதல் எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட எரிவாயு) ரயிலை சபர்மதி ரயில் நிலையத்தில் இருந்து அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய ரயில்வேயில் தூய்மையான மற்றும் மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்.
இந்த ரயில் முழுமையாக எல்என்ஜி-யை மட்டுமே நம்பியிருக்காது. இதன் இன்ஜின், எல்என்ஜி, டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கும். எரிபொருள் இருப்பைப் பொறுத்து ரயிலின் இன்ஜின், எல்என்ஜி மற்றும் டீசலுக்கு இடையே மாறிக் கொள்ளும். இதன் மூலம் எல்என்ஜி கிடைக்காத சூழலிலும் ரயில் சேவையைத் தடையின்றி தொடர முடியும்.
இந்த அமைப்பின் கீழ், டீசல் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை எல்என்ஜி-யால் ஈடுசெய்ய முடியும். டீசல் பயன்பாட்டையும் எரிபொருள் செலவுகளையும் குறைப்பதோடு, கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் மாசுதுகள்கள் உள்ளிட்ட வெளியேற்றங்களையும் குறைப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய ரயிலுடன், கவச் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்புக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.














