அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த ட்ரம்ப் தனது எழுத்துகளுக்காக புலிட்சர் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உலகம் முழுக்க நடந்த அல்லது நடக்க இருந்த 7 போர்களை தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்காக தனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அவர் வெளிப்படையாக கேட்டார். எனினும், கடந்த ஆண்டு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது ட்ரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதேபோல இந்த ஆண்டும், “நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன். இந்த உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினேன். எனவே அமைதிக்கான நோபல் பரிசுக்கு என்னை விட தகுதியான நபர் வேறு யாருமே இல்லை” என ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால், தென் ஆப்பிரிக்க சட்ட நிபுணரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளைக்கு 2026-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், ‘நவநீதம் பிள்ளையை யாருக்கும் தெரியாது’ என சாடினார்.
இந்நிலையில், தென் கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “ரஷ்யா தொடர்பான விசாரணையை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டனர். அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கைகள் தவறானவை.
எனது எழுத்துக்காக எனக்கு புலிட்சர் பரிசு கிடைத்திருக்க வேண்டும். எனக்கு நோபல் அமைதி பரிசும் கிடைக்கவில்லை. புலிட்சர் பரிசும் வழங்கப்படவில்லை. இருந்தாலும், அது குறித்து எனக்கு கவலை இல்லை” எனக் கூறினார்.
புலிட்சர் பரிசு என்பது பத்திரிகை, இலக்கியம், நாடகம் மற்றும் இசை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும். தனது எந்த குறிப்பிட்ட படைப்புக்காக புட்லிசர் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை.
வணிகம், அரசியல் தொடர்பாக சுமார் 20 நூல்களை ட்ரம்ப் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவற்றில் பல நூல்கள் இணை ஆசிரியர்கள் மற்றும் நிழல் எழுத்தாளர்கள் உதவியுடன் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.














