‘என் பேர் சொல்லும் பிள்ளை’! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 28

0
99

கே.பாலசந்தர் சார் படம் ஒன்றில் நான் டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவசரமாக சேம்பர் மீட்டிங் இருந்ததால் அசோசியேட் டைரக்டரிடம் “டப்பிங்கை நீங்க கவனிங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அது எந்தப் படம், எப்போது நடந்தது என்பதைச் சொன்னால், இப்போது இயக்குநராக இருக்கும் அவருக்கு வருத்தம் வரும். அந்த அசோசியேட் நான் மாடுலேஷன் பார்த்து சரியாகப் பேசியதைத் திருத்தினார். அவர் சொன்னது சரியாக இருக்காது என்று எனக்குத் தெரியும். அந்த இடத்தில் அவர் சொன் னதை மறுக்கக் கூடாது என்பதால் அவர் சொன்னபடி பேசினேன்.

மறுநாள் நான் பேசியதைக் கேட்ட கே.பி.சார், என்னை “உள்ளே வா” என்று அழைத்தார். அதைப் போட்டுக் காண்பித்துவிட்டு, “இதுதான் மாடுலேஷனா?” என்று கேட்டார். “இல்லை ஐயா” என்றேன்.

“பிறகு எப்படி இப்படி பேசினே?” என்றார். நான் அந்த அசோசியேட்தான் மாற்றினார் என்று சொல்லவில்லை. நானே தவறு செய்த தாகச் சொன்னேன். பிறகு “சரியான மாடுலேஷனில் பேசு” என்றார். மீண்டும் கரெக்ட்டான மாடுலேஷனில் பேசினேன். ஒரே டேக்கில் பேசி முடித்துவிட்டேன்.

“இதுதானே சரி, பிறகு ஏன் நேற்று அப்படி பேசினே?” என்று கேட்டார் கே.பி.சார். உடனே அவர் அருகில் குனிந்து, “ஐயா, உங்க கையால அடி வாங்குனா, பெரியாளா ஆயிடலாம்னு சொன்னாங்க. அதனாலதான் தப்பா பேசினேன்” என்று அந்த அசோசியேட்டை காட்டிக்கொடுக்க மனமில்லாமல் அப்படிச் சொன்னேன். சிரித்துக்கொண்டே முதுகில் தட்டி, “படவா” என்று சொன்னார். அப்படி, ஒரு தகப் பனுக்கும் மகனுக்குமான பந்தம் எனக்கும் அவருக்கும் இருந்தது.

ஒவ்வொரு புது வருடம் அன்றும் அவர் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். டைரி கொண்டு போவேன். அவர் வாழ்த்து எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார். பிறகு ‘பிரேமி’ என்று சின்னத்திரை தொடர் பண்ணிக்கொண்டிருந்தார். அப்போது கவிதாலயாவில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. “டைரக்டர் உன்னை வரச்சொன்னார்” என்றார்கள். மயிலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் அவர் அலுவலகம் இருந்தது.

சென்றேன். கே.பி.சார் இல்லை. ரேகா ஹவுஸில் ஷூட்டிங். அந்த தொடரில் எம்.கே.முதலியார் என்ற கேரக்டரில் நான் நடித்தேன். “பிரமாதமா நடிக்கிறே” என்று நான்கைந்து முறை சொன்னார் கே.பி.சார். அப்படி ஒரு வார்த்தைக்காகத்தானே காத்துக்கிடந்தோம் என்ற நிலையில் அந்த வார்த்தை எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

அதற்குப் பிறகு அவர் இயக்கிய ‘டூயட்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் வருவேன். படத்தில் அக்காட்சி இடம்பெறவில்லை. படத்தில் வரவில்லை என்றாலும் நேரடியாக அவர் இயக்கத்தில் சீரியலில் நடித்துவிட்டேன். “வெளிய போயி என் பேரைக் காப்பாத்திக் கோடா” என்றார். “சரிங்கய்யா ” என்றேன்.

பிறகு சீரியல்களில் நான் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒவ்வொரு புது வருடத்தன்றும் அவரை பார்க்கச் செல்லும்போது, வந்திருப்பவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொள்வார். ஒரு முறை நான் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். என்னை “இங்க வாடா” என்று அருகில் அழைத்தார். போனேன். என் தோளில் கை போட்டு, “இவன் கூட என்னைப் போட்டோ எடுங்கடா, என் பேர் சொல்லும் பிள்ளைடா இவன்” என்று சொன்னார். என் கண்கள் கலங்கிவிட்டன.

அவர் வீட்டுக்கு போய் தரையில் உட்கார்ந்து அவர் காலை பிடித்து அமுக்கிவிடுவேன். அப்போது என் தந்தைக்குக் கால் அமுக்கிவிட்ட நினைவு வரும். அவர் வேண்டாம் என் றாலும் அதைப் பணிவிடையாக நான் செய்வேன். “இப்ப நடிகனாயிட்ட, மேலே உட்கார்” என்று அவர் சொன்னாலும் அவர் முன்னால் நான் சேரில் உட்காரமாட்டேன்.

அவர் மகன் கைலாசம் காலமானதை கேள்விப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு போனேன். கே.பி.சார் ஒரு காருக்குள் அமர்ந்திருந்தார். அருகில் பிரமிட் நடராஜன் சார் இருந்தார். நான் போய் நின்றதும் என்னை அவர் பார்க்கவில்லை. “உங்க பாஸ்கர் வந்திருக்கான்” என்று பிரமிட் நடராஜன் சார் சொன்னதும் என்னைத் திரும்பிப் பார்த் தார். அவர் கண்களில் ஈரமில்லை, எந்த விதமான உணர்ச்சியும் இல்லை, அந்த கண்களில் உயிரே இல்லை.

“இந்த வயசுல எனக்கு இதெல்லாம் தேவையாடா?” என்று கலங்கிப்போய் கேட்டார்! எனக்கு இதயமே நொறுங்கியது போல் ஆனது. தகப்பன் இருக்கும் போது மகன் இறப்பது என்பது பெரிய சோகம். அவர் கையை பிடித்துக்கொண்டு நானும் அழுதேன். அதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.

பிறகு அவர் பேத்தி திருமணத்தில் கடைசியாகப் பார்த்தேன். மகன் இறப்பில் இருந்து அவர் மீளவே இல்லை. அதற்குப் பிறகு கே.பி.சாருக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்தார்கள். அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி யில்லை. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் என பலர் வந்திருந்தார்கள். யாரையும் அனுமதிக்கவில்லை.

நான் அவர் இருந்த அறைக்கு வெளியே கண்ணீரோடு நின்றிருந் தேன். யாரோ ஒரு நர்ஸ் என்னைப் பார்த்துவிட்டு, “ஏன் இங்க நிற்கிறீங்க?” என்று கேட்டார். “ஐயாவை ஒரே ஒரு தடவை பார்த்திடலாம்னு நிற்கிறேன்” என்று சொன்னேன்.

அவர் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, “உள்ளே வாங்க. ஆனா, தொடக்கூடாது” என்றார். போனேன், அவரைப் பார்த்தேன். அவருக்கு நினைவு இல்லை. பாதம் தொட்டு வணங்க ஆசை! தொடக்கூடாது என்பதால் கையெடுத்துக் கும்பிட்டேன். “ஐயா, பல சாதனைகள் பண்ணியிருக்கீங்க; கஷ்டப்படாம அமைதியா போயிட்டு வாங்க ஐயா” என்று மனதுக்குள் அழுதபடி வேண்டிக்கொண்டு வந்தேன்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here