கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.
கரூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், ஆதரவாளர் பிரவீன் உள்ளிட்டோர் மிரட்டி பத்திரப் பதிவு செய்ததாக வாங்கல் போலீஸில் புகார் கொடுத்தார். இதேபோல, இந்த சம்பவத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கில், தானும் கைது செய்யப்படலாம் என்று கருதிய விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவரும், அவரது சகோதரர் சேகரும் 2 முறை தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில், 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 16-ம் தேதி கைது செய்து கரூர் அழைத்து வந்தனர். சிபிசிஐடி அலுவலகத்தில் அவர்களிடம் 7 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்பு அவர்கள் இருவரும் நள்ளிரவு 12.15 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று அதிகாலை அவர்களை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையிலும், பிரவீனை குளித்தலை சிறையிலும் அடைத்தனர். முன்னதாக, கரூர் அரசு மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
மோசடிக்கு உடந்தை: இதற்கிடையே, சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணம் காணாமல் போனதாக சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, ‘அந்த ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை’ என, அங்கு பணிபுரிந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் ‘நான்-ட்ரேஸிங்’ சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த ஆவணத்தை வைத்துதான், நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், பிருத்விராஜை சிபிசிஐடி போலீஸார் கடந்த 16-ம் தேதி இரவு கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை அவரை கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பிறகு, மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டார்.
பின்னர், அவரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிபதி பரத்குமார் உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது, பிருத்விராஜ் கரூரில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.