கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் நாயகன் சத்யாவுக்கு (‘மெட்ரோ‘ சத்யா), கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. வாங்கும் சம்பளத்தில் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு கொஞ்சம் அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்கிறார். ஆனால் அவரின் நாகரிக மோகத்துக்கு, வாங்கும் சம்பளம் போதவில்லை. இதனால் ஒரு பக்கம் வேலை பார்த்துக்கொண்டே ஆளரவமற்ற இடங்களில், தனியாக வரும் பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அது அவரை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பது கதை.
நாளிதழ்களில் வரும் நகைப் பறிப்பு செய்திகளை வாசித்துவிட்டு ‘யாருக்கோ’ என்று எளிதில் கடந்து விடுகிறோம். இதுபோன்ற சம்பவங்களில் சில இளம் பெண்கள் உயிர்விடும் அதிர்ச்சியையும் அடுத்தடுத்த நாட்களில் மறந்து விடுகிறோம். ஆனால் நகைப்பறிப்புக்குப் பின் உள்ள ‘திருட்டு’ நெட்வொர்க், அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், அந்த நகைகளை என்ன செய்கிறார்கள் என்கிற குற்றத்தை, பரபர த்ரில்லாக தருகிறது, அறிமுக இயக்குநர் எஸ்.எம்.பாண்டி இயக்கி இருக்கும் இந்த ‘ராபர்’.
படித்து வேலையில் இருக்கும் மாடர்ன் இளைஞன் ஒருவன், பண ஆசைக்காகத் தடம் மாறுவதையும், அந்தப் பண போதை அவனை எப்படி கொடூரமானவனாக அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு செல்கிறது என்பதையும் நகை பரிமாற்றத் தொடர்புகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத் தனங்களையும் சொல்லும் கதையின் வேகம், ரசிக்கவும் பதைபதைக்கவும் வைக்கிறது.
சிறைக்குப் புதிதாக வரும் கைதிகளிடம் பழைய கைதியான சென்ராயன், ராபரி கதையை விவரிப்பது போன்ற, முன் பின்னான திரைக்கதையும் இறுதியில் வருகிற அந்த ட்விஸ்டும் ரசனை. கதை, திரைக்கதை, வசனத்தை,’மெட்ரோ’ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியிருப்பதாலோ, என்னவோ சில இடங்களில் ‘மெட்ரோ’ தாக்கம் தெரிந்தாலும் படத்துக்குப் பாதகமில்லை.
கொடூரமாக மாறும் அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்துக்கு நாயகன் சத்யா கச்சிதமாகப் பொருந்துகிறார். மகளை இழந்து பரிதவிப்பவராகவும் பழிவாங்கும் எண்ணத்திலும் இருக்கும் ஜெயப்பிரகாஷ், எமோஷனில் உருக வைக்கிறார். அவருக்கு உதவும் முன்னாள் போலீஸ்காரர் பாண்டியன் யதார்த்தமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார். வழக்கத்துக்கு மாறாக, மாடர்ன் வில்லனாக அதிர்ச்சிக் கொடுக்கிறார், டேனி. அவர் நடிப்பு, கதாபாத்திரத்தின் நம்பகத்
தன்மைக்கு உயிரூட்டுகிறது.
அம்மா தீபா சங்கர், கிளைமாக்ஸில் எடுக்கும் முடிவு பகீர் ரகம். உதயகுமாரின் ஒளிப்பதிவும் ஜோகன் சிவனேஷின் பின்னணி இசையும் படத்தை வேகமாகக் கொண்டு செல்ல, அழுத்தமாக உதவியிருக்கிறது. ஒரே மாதிரியான காட்சிகள் சிலஇடங்களில் தொய்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் த்ரில் அனுபவத்தைத் தருகிறது ‘ராபர்’.