கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ன்ட், அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.
இந்நிலையில் இன்று காலை (செப்.16) முதல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு மறு அறிவிப்பு வரும் வரை வனத்துறை தடை விதித்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானைகள் இடம் பெயர்ந்து வனப்பகுதிக்குள் சென்றதும் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.” என்றனர்.