காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மோடி ஆய்வு: முழு திறனையும் பயன்படுத்த பாதுகாப்பு படைக்கு உத்தரவு

0
65

ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படைகளின் முழுதிறனையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரெசி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு கதுவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையேபயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு படையினர் 6 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சண்டை மறுநாள் வரை தொடர்ந்தது. அப்போது 2-வது தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சண்டையில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் காஷ்மீரின் தோடா பகுதியின் மலை உச்சியில் 4 தீவிரவாதிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே 4 முறை மோதல் நடைபெற்றது.

அமித் ஷா, அஜித் தோவல்.. இந்நிலையில் காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடமும் பிரதமர் மோடி பேசினார்.

ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அங்கு மேற்கொள்ளப்படும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடிக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரின் முழு திறனையும் பயன்படுத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.