தமிழகத்தில் மார்ச் 25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

0
250

தமிழகத்தில் இன்று (மார்ச் 21) முதல் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 22, 23-ம் தேதிகளில் சில இடங்களிலும், 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வரும் 26-ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் மார்ச் 20-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் 4 செ.மீ., குண்டாறு அணையில் 3 செ.மீ., தென்காசி மாவட்டம் ஆயிக்குடி, திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணை, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 99 டிகிரி, குறைந்தபட்சமாக 70 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here