தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் கடந்த 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது சென்னை அம்பத்தூரில் இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளர் மேலாண்மையில் பிஏ, எம்ஏ மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2001 முதல் முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி) மேற்கொள்வதற்கான ஆராய்ச்சி நிலையமாகவும் இந்த கல்வி நிலையத்தை சென்னை பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்து.
தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக ஆய்வாளர்கள் ஆகியோருக்கு கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகளையும் இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த கல்வி நிலையத்தால் நடத்தப்படும் படிப்புகள், பயிற்சி வகுப்புகள், ஆராய்ச்சி செயல்பாடுகள், சேர்க்கை தொடர்பான தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் பிற கல்வி நிலைய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை மாணவர்கள், பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், https://tils.tn.gov.in என்ற புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் துறைச் செயலர் கொ.வீரராகவ ராவ், தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையரும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தின் இயக்குநருமான கோ.சசிகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.















