Home மாநில செய்திகள் அமைச்சர் மரிய வில்சனிடம் விசாரணை நடத்த வேண்டும்: அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

அமைச்சர் மரிய வில்சனிடம் விசாரணை நடத்த வேண்டும்: அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

0

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் கல்வித் துறை சம்பந்தமாக நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும் போது, சம்பந்தமே இல்லாமல், ‘இதற்கு நானே சாட்சி’ என்று கூறுகிறார்.

அவர் நின்று பேசிய இடம் சட்டப்பேரவை. அங்கு யார் நின்று என்ன வார்த்தை பேசினாலும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். எனவே, ஆதாரமில்லாமல் கூறுவது மிகப்பெரிய தவறு.

குறிப்பாக, 2 மாதங்களுக்கு முன்பு ஒருவரால் என் மீது அவதூறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்காக நான் அவர் மீது ரூ.50 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.

கடந்த டிசம்பர் மாதம், முறையாகப் பள்ளிகள் நடத்தப்படவில்லை என்பது தொடர்பாக உள்ளூர் கல்வி அதிகாரிகள் கண்டறிந்தபோது, உடனடியாக அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி தொடங்குவதாகக் கையெழுத்திட்டு, பல்லாவரத்தில் பள்ளியை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் கிடைத்தன. இதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில்தான் அமைச்சர் பேசியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும். அவர் ‘நானே சாட்சி’ என்று கூறியிருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version