‘மாற்றம் என்று சொல்லி வந்தவர்களால் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராமாபுரம் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், டெல்லி தமிழ் சங்கத்துக்கு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிக்காக ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பரந்தூர் விமான நிலைய திட்டம் உட்பட எந்தத் திட்டம் வந்தாலும் அது மக்களுக்கான திட்டமாக இருக்க வேண்டும்.
உண்மையாகவே மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்; விளைநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன என்றால் அந்தத் திட்டத்துக்கு தேமுதிக துணை நிற்காது.
தேர்தலில் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற வேண்டும். எந்த தாய்மாராவது 6 சிலிண்டர்களை இலவசமாகக் கொடுங்கள் என்று கேட்டார்களா? தேர்தலில் வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதை முறையாக நிறைவேற்ற முடியவில்லை என்றால் என்ன பயன்? மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள்.
ஆனால் தற்போதுவரை அது வழங்கப்படவில்லை. மாற்றம் மாற்றம் என்று சொல்லி வந்தவர்களால் எந்தவிதமான மாற்றமும் இல்லை. திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சில கட்சியினர் அமைச்சர் பதவிக்காக வேறு கூட்டணிக்கு மாறி விட்டார்கள்.
எனக்கும் அழைப்பு வந்தது. ஆனால் நான் செல்லவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் என்றும் மாற்றம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
