அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு விவகாரம்: விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் இன்று தாக்கல்

0
57

அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான விவகாரத்தில் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் இன்று (செப்.13) தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தன்னம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதனுடன் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவும்விசாரணை செய்து வந்தது.அதன்படி அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்களிடம் நிகழ்ச்சி தொடர்பாக குழு விசாரித்தது.

நிகழ்ச்சிக்கு மகாவிஷ்ணுவை யார் பரிந்துரை செய்தது, அதற்கு முன் அனுமதி பெறப்பட்டதா என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிப்பு பணிகளில் விசாரணைக் குழு ஈடுபட்டு வந்தது. இந்த பணிகள் நேற்று நிறைவு பெற்றன.

இதையடுத்து தமிழக அரசின் தலைமைச்செயலரிடம் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதிலுள்ள பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here