நாகர்கோவில் முதல் களியக்காவிளை வரையிலான 30கிலோ மீட்டர் சாலையில் பெரும்பாலான பகுதிகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் தினசரி பல்வேறு விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பே சாலையை செப்பனிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தும் இது வரை சாலை செப்பனிட படாததால் பல கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
எனவே சாலை சீரமைக்க கேட்டு இன்று (27-ம் தேதி) மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் சாலையை செப்பனிட வலியுறுத்தி முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்தது.
அதன்படி இன்று மார்த்தாண்டம், பம்மம், வெட்டு வன்னி, குழித்துறை, கழுவன்திட்டை உட்பட பல பகுதிகளில் 1000 மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.