உ.பி.யில் தர்காவில் காவி கொடி ஏற்றியவர் கைது: துணை ஆய்வாளர், 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

0
31

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று காவி கொடி ஏற்றியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர், இரண்டு காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் எல்லையிலுள்ள சிக்கந்தராவில் பஹரியா பகுதியில் சையத் சாலார் மசூத் காஜியின் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் இந்த தர்காவுக்கு இந்துக்களும் வந்து வணங்கிச் செல்வது உண்டு. சமீப காலமாக இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்த தர்காவின் மீது புகார் உள்ளது.

இச்சூழலில், ராம நவமி தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்து அமைப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் இந்த தர்காவின் கூரையில் காவி கொடியை ஏற்றினர். குவிமாடத்தில் ஏறி நின்ற அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பினர்.
இதனால், அப்பகுதியில் இஸ்லாமியர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் பரவியது. இப்பகுதியில் காவலுக்கு இருந்த பஹரியா காவல் நிலையத்தாரும் அப்போது காணப்படவில்லை.

24 பேர் மீது வழக்கு: காவி கொடி ஏற்றிய காட்சிப்பதிவை சமூக வலைதளங்களில் பார்த்த பிறகு போலீசார் அங்கு வந்தனர். அதற்குள் அனைவரும் தப்பி ஓடிவிட, 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, சிக்கந்தரா பகுதியின் கூடுதல் டிசிபி புஷ்கர் வர்மா விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், காவி கொடி ஏற்றிய கும்பலுக்கு தலைமை வகித்ததாக மான்வேந்தர் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மஹராஜா சுஹல்தேவ் சம்மான் சுரக்ஷா மஞ்ச் எனும் இந்துத்துவா அமைப்பின் தலைவர். இவருடன் இருந்த இதர இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த ராஜ்குமார் சிங், வினய் திவாரி, அபிஷேக் சிங் உள்ளிட்ட 20 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிறப்பு படை பாதுகாப்பு: இதனிடையே, விசாரணை அறிக்கையின்படி, பணியில் அலட்சியம் காட்டியதாக பஹரியா காவல் நிலையத்தினர் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் காவல் நிலையப் பொறுப்பாளரான துணை ஆய்வாளர் ரவி கட்டியார், கான்ஸ்டபிள்களான அன்ஷு குமார் மற்றும் சுனில் குமார் யாதவ் ஆகியோர் அடங்குவர். தற்போது சாலார் மசூத் காஜியின் தர்காவில் உ.பி.யின் பிஏசி சிறப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here