மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு வங்கத்தில் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் மாத ஊதியம் ரூ.8,250-ல் இருந்து ரூ.9,000 ஆக அதாவது ரூ.750 உயர்த்தப்படுகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்களின் ஊதியம் மாதம் ரூ.500 உயர்த்தப்படும். இதுவரை மாதம் ரூ.6,000 பெற்று வந்த இவர்கள், இனி ரூ.6,500 பெறுவார்கள். அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்களின் பணி பெருமை அளிப்பதாக உள்ளது’’ என்று மம்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பதிவில், “ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருவது நமக்கு பெருமை அளிக்கிறது. எல்லா மோசமான நேரங்களிலும் அவர்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்க்கையை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் புதிய திட்டங்களை தொடங்கிவைத்தும் வருகிறார். கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் அதே நாளில் முதல்வர் மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.