“சமூகநீதி, சமத்துவம் தழைத்தோங்கிட உறுதியேற்போம்” – அண்ணா பிறந்தநாளில் முதல்வர் விஜய் ட்வீட்

0
24

“பேரறிஞர் அண்ணாவின் உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூக நீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்” என அவரது பிறந்தநாளில் தமிழக முதல்வர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா.

‘கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு’, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூக நீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று (செப்.15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முன்னதாக இன்று காலை சென்னை அண்ணா சாலையில் அவரது திருவுருவப் படத்துக்கு சபாநாயர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here