கடந்த அக்டோபர் 12-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக் கில் கைதாகி உள்ள 5 பேரில் ஒருவர், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோ லுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் அவருடைய பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்குமுன், லாரன்ஸை போல் அன்மோலும் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பொறுப்பேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வழக்கில் 1,735 பக்க குற்றப்பத்திரிகை மும்பை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மும்பையில், சல்மான் கான் வீட்டின் மீது 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பினர். இதுதொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேரிடம் அன்மோல், 9 நிமிடங்கள் பேசியுள்ளார். மேலும் பாபா சித்திக்கின் மகன் ஜிஷான் சித்திகையும் கொல்ல அவரது புகைப்படத்தை அன்மோல் அனுப்பியுள்ளார்.
இத்துடன் சேர்த்து அன்மோல் மீது இந்தியாவில் மொத்தம் 18 வழக்குகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்கிறது. அதன் அடிப்படையில் சர்வதேச குற்றவாளியான அன்மோலை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசும் என்ஐஏ அறிவித்துள்ளது.
ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் இருந்தார் அன்மோல். பிறகு அக்டோபர் 7, 2021-ல் ஜாமீன் பெற்றவர் தலைமறைவாகி விட்டார். குற்றவாளி அன்மோல் கடந்த ஆண்டு கென்யாவில் இருந்துள்ளார். இதுபோல், தம் முகாமை வெளிநாடுகளில் அடிக்கடி மாற்றுவதும் அன்மோலுக்கு வழக்கமாக உள்ளது.
மான் வேட்டை பிரச்சினை: கடந்த 1998-ல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் படப்பிடிப்புக்கு வந்தபோது மான் வேட்டையாடியதாக சல்மான் கான் மீது வழக்கு உள்ளது. இதில் தண்டனை பெற்ற சல்மானின் மேல்முறையீட்டு வழக்கும் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மான் வேட்டை புகார் சமயத்தில் 5 வயது சிறுவனாக இருந்தவர் லாரன்ஸ். இவர் சார்ந்த பிஷ்னோய் சமூகம், வனம் மற்றும் விலங்குகளையும் கடவுளாக வணங்குகிறது. இதனால், மான் வேட்டையாடிய சல்மானை கொல்வதாக லாரன்ஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.