பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்தவர் முகமது உஸ்மான் ஜாட். இவர் லஷ்கர் இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாத பயிற்சி பெற்று காஷ்மீருக்குள் நுழைந்தார். அவர் இங்கு வந்தபின், காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை அவருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. தீவிரவாத முகாம்களில் காஷ்மீர் பற்றி தங்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை உணர்ந்தார்.
இதனால் அவரது மனம் தீவிரவாதத்தை பரப்பும் செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் அவருக்கு தலையில் விழுந்த வழுக்கை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இதனால் அவர் முடிமாற்று சிகிச்சை செய்து கொள்வதில் தனது கவனத்தை திசை திருப்பினார். ஸ்ரீநகரில் அவர் தங்கியிருந்தபோது பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜார்கம் மற்றும் அப்துல்லா என்ற அபுஹூரேரா ஆகியோர் அவருக்கு அறிமுகமாகினர்.
அவர்கள் முடிமாற்று சிகிச்சை நிபுணரிடம் முகமது ஜாட்டை அழைத்துச் சென்று சிகை அலங்காரம் செய்துள்ளனர். அதன்பின் முகமது ஜாட் ஜம்மு, பஞ்சாப் போன்ற இடங்களுக்கு பேருந்துகளில் சகஜமாக பயணம் செய்துள்ளார். அவர் இந்தியர்களை போன்று ஆதார் அட்டை, பாஸ்போர்ட் பெறும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டார்.
இந்நிலையில் முகமது ஜாட், அப்துல்லா ஆகியோரை ஸ்ரீநகர் போலீஸார் கடந்த மாதம் சுற்றிவளைத்து கைது செய்து என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், முகமது ஜாட் காஷ்மீர் வந்தபின் மனம் மாறியது தெரியவந்தது. இதேபோல் கடந்த 2012-ல் காஷ்மீருக்குள் நுழைந்த உமர் என்ற பாக். தீவிரவாதியும், மனம் மாறி ராஜஸ்தானில் போலி ஆவணங்கள் பெற்று கடந்த 2024-ல் இந்தோனேஷியா தப்பிச் சென்றுள்ளார் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.















