தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று நடைபெற்றது. அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜு விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம் உட்பட பல நிவாரண உதவிகளை செய்து விவசாயிகளை கைதூக்கி விட்டது அதிமுக அரசு. இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் 1 கோடியே 6 லட்சத்து 98,482 விவசாயிகளுக்கு ரூ.60,646 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்: 2011 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகாலத்தில் சராசரியாக ரூ.6 ஆயிரம் கோடிதான் பயிர்க்கடன் கொடுத்துள்ளீர்கள். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்குகிறது. கடந்த ஆண்டு ரூ.12,600 கோடி, இந்த ஆண்டு ரூ.16,500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செல்லூர் கே.ராஜு: சென்னைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்தீர்கள். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் ஒதுக்க வேண்டும். எங்களுக்கு கூட்டணி மீது இருக்கும் நம்பிக்கையைவிட, எங்கள் தொண்டர்கள் மேல் இருக்கும் நம்பிக்கைதான் அதிகம்.
பேரவை தலைவர் மு.அப்பாவு: கூட்டணி இல்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள். நன்றி.
செல்லூர் கே.ராஜு: நாங்கள் கூட்டணிக்காக அலைபாய்வதே இல்லை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்களின் மனஓட்டம் எங்கள் பொதுச்செயலாளருக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.