வளைகுடா நாட்டிலிருந்து மனைவி திரும்புவதற்கு முன்பு எனது கடன்களை அடைக்க வங்கியில் கொள்ளையடித்தேன் என்று கேரளாவைச் சேர்ந்தவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் போட்டா பகுதியிலுள்ள ஃபெடரல் வங்கிக் கிளையில் 3 தினங்களுக்கு முன்பு கொள்ளைச் சம்பவம் நடந்தது. மர்மநபர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து கத்திமுனையில் மிரட்டி ஊழியர்களை அறையில் தள்ளி பூட்டி ரூ. 15 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றார். வெறும் இரண்டரை நிமிடங்களில் இந்த கொள்ளைச் சம்பவத்தை அந்த நபர் அரங்கேற்றினார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வங்கியில் கொள்ளை அடித்த ரிஜோ அந்தோணி (42) என்ற நபரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். வங்கிக் கிளையில் கிடைத்த டிஜிட்டல் ஆவணங்கள், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு அந்த நபரை கைது செய்ததாக திருச்சூர் சரக போலீஸ் டிஐஜி சங்கர் தெரிவித்தார்.
டிஐஜி சங்கர் கூறும்போது, “கொள்ளையடித்த நபர் ஸ்கூட்டரில் தப்பியோடிய காட்சிகள் எங்களுக்குக் கிடைத்தன. அந்த ஸ்கூட்டர் பிராண்டை வைத்து, நாங்கள் சோதனை நடத்தியதில் ரிஜோ அந்தோணி சிக்கினார். ரிஜோ அந்தோணியின் மனைவி வளைகுடா நாட்டில் வேலை செய்து பணத்தை அனுப்பி வருகிறார். ரிஜோ, அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் மனைவி அனுப்பிய பணத்தை இஷ்டத்துக்கும் செலவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரூ.10 லட்சம் கடனும் வாங்கி செலவு செய்தார். அடுத்த மாதம் அவரது மனைவி திருச்சூர் வர இருக்கிறார். எனவே, மனைவி வருவதற்குள் கடனை அடைக்க விரும்பிய ரிஜோ, வங்கியில் கொள்ளையடித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணைக்குப் பின்னர் தனது வாக்குமூலத்தில் ரிஜோ அந்தோணி இதைத் தெரிவித்துள்ளார்” என்றார்.