நாளை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: டெல்லியின் அடுத்த முதல்வர் யார்?

0
40

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனால் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்கள் மட்டுமே பெற்றது. டெல்லி முன்னாள் முதல்வர் அர்விர்ந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு இத்தேர்தல் பெரிய பின்னடைவாக அமைந்தது. மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் மூன்றாவது முறையாக அனைத்து இடங்களில் தோல்வி அடைந்தது.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு தீவிரம் அடைந்துள்ளது.

புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்ற கட்சி கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இக்கூட்டம் புதன்கிழமைக்கு (நாளைக்கு) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் முதல்வர் பதவியேற்பு விழாவும் 18-ம் தேதியில் இருந்து வரும் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி முதல்வர் பதவிக்கு பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா உள்ளிட்ட தலைவர்களின் பெயர் அடிபடுகிறது. புதுடெல்லி தொகுதியில் அர்விந்த் கேஜ்ரிவாலை தோற்கடித்ததன் மூலம் பர்வேஷ் வர்மா வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.

டெல்லி முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான இவர், மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். டெல்லியில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஜாட் சமூகத்தின் வலுவான பிரதிநிதியாக அறியப்படுகிறார்.

முடிவுக்கு வரும் சட்டப்பேரவையில் பாஜக தலைவராக இருந்து விஜேந்தர் குப்தாவின் பெயரும் முதல்வர் பதவிக்கு பரசீலிக்கப்படுகிறது. இவர் ரோகிணி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். மாநில அரசை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த தலைவராக அவர் பார்க்கப்படுகிறார்.

இவர்கள் தவிர டெல்லி பாஜக முன்னாள் தலைவர்கள் சதீஷ் உபாத்யாய, வீரேந்திர சச்தேவா ஆகியோருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளும் பிரபல வழக்கறிஞருமான பன்சூரி ஸ்வராஜ், டெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா ஆகியோரின் பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.

ம.பி., உ.பி.யை போல பரந்த சமூகப் பிரதிதித்துவத்தை உறுதிசெய்ய இரு துணை முதல்வர்களும் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here