கோவாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பயணியை வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றத்துக்காக கோவாவைச் சேரந்த 31 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
ஐரிஷ்-பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான டேனியல் மெக்லாலின் என்ற பெண் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவுக்கு சுற்றுலா வந்தார். அப்போது, கோவாவைச் சேர்ந்த விகத் பகத் என்பவர் டேனியலுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ளார். டேனியலின் உடல் தெற்கு கோவாவின் கனகோனா கிராம வனப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு கோவா நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கோவாவைச் சேர்ந்த விகத் பகத் (31) என்பவர்தான் குற்றவாளி என மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட அமர்வு நீதிபதி ஷாமா ஜோஷி நேற்று வழங்கிய தீர்ப்பில்” கொடுமையான குற்றத்தில் ஈடுபட்ட விகத் பகத்துக்கு கடும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காக ரூ.25,000 மற்றும் சாட்சியங்களை அழித்ததற்காக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் வெளியிட்ட அறிக்கையில், “ நீதிக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. டேனியலை அவர்களது மகளாக நினைத்து ஓய்வின்றி போராடி இந்த நீதியை பெற்றுத்தந்துள்ளனர் ” என்று கூறியுள்ளனர்.