காஷ்மீர் பண்டிட்டுகள் எங்களுடன் சேர்ந்து கண்ணியத்துடன் வாழ வேண்டும்: காஷ்மீர் முஸ்லிம் மதகுரு விருப்பம்

0
35

காஷ்மீர் பண்டிட்டுகள் கண்ணியத்துடன் எங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே விருப்பம் என காஷ்மீர் தலைமை முஸ்லிம் மதகுரு மிர்வைஸ் உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு பண்டிட்டுகள் திரும்ப வேண்டும் என்பது அரசியல் பிரச்சினை இல்லை. என்னைப் பொருத்தவரை அது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. இதில் வாக்கு வங்கி அரசியல் கூடாது. நாம் நீதியின் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்.

அதேநேரம் அந்த சமூகத்துக்கு தனி தாயகம் கோருவது அல்லது பிரத்யேக தீர்வு யோசனைகளை முன்வைப்பது நிராகரிக்கத்தக்கது. ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையான பண்டிட்டுகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு நாமே பொறுப்பு. ஏனென்றால், இங்கு நாம் தான் (காஷ்மீர் முஸ்லிம்கள்) பெரும்பான்மை சமூகமாக உள்ளோம்.

காஷ்மீர் பண்டிட்டுகளில் சிலர் தெற்கு காஷ்மீர் பகுதியில் தனி நிலம் கோருகின்றனர். இது, ஏற்கத்தக்கதல்ல. இதனை காஷ்மீர் பெரும்பான்மை சமூகமான நாங்கள் மட்டுமல்ல காஷ்மீர் பண்டிட்டுகளில் பெரும்பாலானோரும் விரும்ப மாட்டார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் தனியாக பூட்டிக்கொண்டு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் எங்களுடன் இணைந்து கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்றே விரும்புகிறோம். இந்த எண்ணம் நிறைவேறுவதற்காக கடுமையாக உழைப்போம். அதற்கான பேச்சுவார்தைகளை அனைத்து தரப்பிலும் முன்னெடுப்போம். இவ்வாறு மிர்வைஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here