ஜார்க்கண்ட் அரசு தேர்வு ரத்தானதால் சுமார் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வேலையை பறித்ததற்கு பதிலாக எங்களை அரசு கொலை செய்து இருக்கலாம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக தலைநகர் ராஞ்சியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. போராட்டம் தீவிரம் அடைந்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் டிஎஸ்ஆர் டேட்டா பிராசஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி – சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார். இதனால், மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்ப பெறுவதாக அறிவித்தனர்.
இதனிடையே, ஜார்க்கண்ட் அரசின் உத்தரவின் மூலம், கடந்த 12 ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2,000 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து வேலையில் இருக்கும் ரகுவேந்திரா என்பவர் கூறும்போது, “சிஜிஎல் தேர்வில் வெற்றி பெற்றதால் கடந்த ஜனவரியில் நான் பார்த்து வந்த ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். இப்போது வேலை போய்விட்டது. அரசு பணியில் சேர்வதற்கான வயதும் தற்போது கடந்துவிட்டது” என்றார்.
கோடெர்மா பகுதியைச் சேர்ந்த சந்தீப் யாதவ் கூறும்போது, “நான் ஊழல் கண்காணிப்புத் துறையில் வேலையில் சேர்ந்திருந்தேன். இன்று நான் வேலைக்குச் சென்றபோது என்னுடைய அடையாள அட்டையைப் பார்த்து தடுத்து நிறுத்திய செக்யூரிட்டி அதிகாரிகள், உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. என்னுடைய கனவுக் கோட்டை சிதைந்துவிட்டது” என்றார்.
