கணவரை குத்திக் கொலை செய்து ப்ளூ டிரம்மில் மறைத்த வழக்கில் மனைவி, அவரது காதலர் ஆகியோர் குற்றவாளிகள் என மீரட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் சவுரவ் ராஜ்புத். இவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி. முஸ்கானுக்கு சஹில் ஷுக்லா என்ற காதலர் உள்ளார். இந்நிலையில் தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த சவுரவை முஸ்கானும், சஹிலும் இணைந்து, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
உடலை ப்ளூ டிரம்மில் போட்டு சிமெண்ட் கான்கிரீட் கலவை, மணலைக் கொட்டினர். பின்னர் ஆயுதம், டிரம்மை மறைத்து வைத்துவிட்டு இமாச்சல பிரதேசத்துக்கு தப்பியோடினர். இந்த வழக்கில் மீரட் போலீஸார் விசாரணை நடத்தி சஹில், முஸ்கானை கைது செய்தனர்.
126 முறை நடந்த நீதிமன்ற விசாரணையில் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து நேற்று மீரட் மாவட்ட நீதிபதி அர்விந்த் குமார் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். கணவரை கொலை செய்து, அதை மறைத்த வழக்கில் அவரது மனைவி முஸ்கான், காதலர் சஹில் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ப்ளூ டிரம்மையும், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும் இவர்கள் மறைத்துள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
