பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா பி.வராலே அமர்வில் விசாரணைக்குவந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, ‘‘மாசு இல்லாத பட்டாசுகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, பட்டாசு தயாரிப்பு வழிமுறைகள் பல்வேறு மாற்றத்தை கண்டுள்ளன. எனவே, மாசு குறைந்த சிறிய ஷெல் வகையிலான மற்றும் சிறிய பைப் அடிப்படையிலான பட்டாசுகளை தயாரிக்க அனுமதிக்கலாம். சரவெடிகள் தயாரிப்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கலாம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு’’ என தெரிவித்தார்.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ‘‘பட்டாசுக்கு அனுமதி வழங்கக் கூடாது’’ என வாதிடப்பட்டது. நீதிபதிகள், ‘‘பட்டாசுக்கு மொத்தமாக தடை விதிக்க முடியாது. முதியோர், குழந்தைகள், நோய் வாய்ப்பட்டோரை கருத்தில் கொண்டு காலவரம்பு நிர்ணயிக்கப்படும்’’ என்றனர். மத்திய அரசு சரவெடிகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலைப்பாட்டை ஏற்று், சரவெடிகளை தயாரித்து, விற்பனை செய்யலாம் என்றும் நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
