பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.30 மணி அளவில் எஸ்றா சற்குணம் காலமானார்.
எஸ்றா சற்குணம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியச் சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நிலை குறைவால் நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். எஸ்றா சற்குணத்தை பொறுத்தவரை தாம் ஒரு பேராயராக மட்டும் இல்லாமல் அரசியல் குறித்த ஆழ்ந்த ஞானமிக்கவராகவும் திகழ்ந்தவர். சிறுபான்மையினர்களின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க அரும்பாடுபட்டவர்.முத்தமிழ் அறிஞர் கலைஞருடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர். சமூக சேவை மக்கள் தொண்டு இறைப்பணி எனப் பல தளங்களில் தமது பணியைச் சிறப்பாகச் செய்தவர். துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் கருத்துகளை வெளிப்படுத்துபவர். பேராயர் எஸ்றா அவர்களைப் பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.