ஆன்லைனில் பெண்களுக்கான ஜிகாதி படிப்பை ஜெய்ஷ்-இ-முகம்மது தொடங்கியுள்ளது.
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்தியாவால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்கினார்.
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல், 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட கொடூர தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐ.நா.சபையால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது, இம்மாத தொடக்கத்தில் ‘ஜமாத்-உல்-முமினாத்’ என்ற பெயரில் மகளிர் பிரிவை தொடங்கியது. இந்நிலையில் நிதி திரட்டுதல் மற்றும் ஆள் சேர்ப்புக்காக ‘துஃபத்-அல்-முமினாத்’ என்ற பெயரில் பெண்களுக்கான ஆன்லைன் படிப்பை இந்த அமைப்பு தொடங்க உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஜிகாதி படிப்புக்கான மகளிர் சேர்க்கை ஆன்லைனில் நவம்பர் 8-ல் தொடங்குகிறது. பாடவேளை ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் நீடிக்கும். மசூத் அசாரின் 2 சகோதரிகளான சாதியா அசார், சமைரா அசார் ஆகியோரால் பாட வகுப்புகள் வழிநடத்தப்படும். இந்த வகுப்புகள் ஜமாத் உல்-முமினாத்தில் பெண்கள் சேர்வதை ஊக்குவிக்கும்.
அசாரின் தங்கை சாதியா அசார், இதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மசூத் அசார், அவரது தளபதிகள் உள்ளிட்ட தலைவர்களின் குடும்ப பெண்கள் ஜிஹாத் மற்றும் இஸ்லாம் தொடர்பான கடமைகள் பற்றி கற்பிப்பார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆன்லைன் ஜிகாதி படிப்புக்காக ஒவ்வொரு பெண்ணிடம் இருந்தும் 500 பாகிஸ்தானிய ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.156) கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.