ரூ.10 லட்சம் கோடி கடனுடன் ஆந்திராவின் கஜானாவையே முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காலி செய்துவிட்டார் என ஆந்திர மாநில நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநில நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணாவுக்கு காக்கிநாடா மாவட்ட பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் நேற்று அம்மாவட்டத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிலர் கூட்டணி கட்சிகளுக்கிடையே பிரச்சனை வெடித்து வருவதாக வீண் புரளியை கிளப்பி வருகின்றனர். அப்படி ஏதும் நடக்கவில்லை. அப்படி ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவற்றை பேசி தீர்த்து கொள்ளலாம். ஜெகன் தன்னுடைய ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி கடனுடன், ஆந்திர மாநில கஜானாவையே காலி செய்து சென்றுவிட்டார். தனது அனுபவத்தால் இம்மாநிலத்தின் பொருளாதார நிலைமையை சரிசெய்ய முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிர முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். கஜானா காலியானாலும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
அடுத்த 3 ஆண்டுகளில் அமராவதி பணிகளையும் நிறைவு செய்துவிடுவோம். 2014-ம் ஆண்டிலேயே அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரம் என தீர்மானம் செய்துவிட்டோம். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியலால் அது தாமதம் ஆனது” தெரிவித்தார்.