தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக கூறிவருவது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூறிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை அளிக்காத நிலையில், ஆளுநர், சட்டப்படி தன் கடமையை நிறைவேற்ற வேண்டும். மரபுப்படி ஆளுநர், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்கு தலைமை தாங்கும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம்.
அல்லது அதிக இடங்களை பெற்ற கட்சி ஆட்சியமைக்க விருப்பம் தெரிவிக்குமேயானால், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அல்லது வெற்றி பெற்ற உறுப்பினர்களின் ஆதரவு திருப்தி அளிக்கும் அளவுக்கு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசியலமைப்பு சட்டம் 164-ன் கீழ் ஆளுநருக்கு உள்ளது.
அதன் பின்னர், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தன் ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை கடிதம் மூலம் அளித்துள்ள நிலையில், வேறு எந்த கட்சியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திருமாவளவனும், கம்யூனிஸ்ட்டுகளும் பாஜகவை விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது.
மலிவான அரசியல்
தமிழகம் சீரழிந்து போனதற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸும், திருமாவளவனும் இப்போது நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காமல் பாஜகவை விமர்சிப்பது மலிவான அரசியல் தானே? நேற்று வரை தவெக-வை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், விஜய்யை பாஜக-வால் உருவானவர், பாஜக-வின் ‘பி’ டீம் என்றெல்லாம் விமர்சித்த திருமாவளவன், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்.
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலின் முடிவை அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய அதே வேளையில், அரசியலமைப்பு சட்டத்தின் படியே ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.















