தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று காலையுடன் நிறைவடை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணையில் 15 செமீ, தஞ்சாவூர் ஒரத்தநாடில் 13 செமீ, கன்னியாகுமரி கோழிப்போர்விளை, தக்கலை, நெய்யூர், திருவாரூர் மன்னார்குடி, தஞ்சை ஆடுதுறை ஆகிய இடங்களில் தலா 11 செமீ, அரியலூர் மாவட்டம் சுததமல்லி அணை, குடவாசல், இரணியலில் தலா 10 செமீ, மஞ்சளாறு, நீடாமங்கலத்தில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நாளை முதல் அக்.31-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.