தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்நவ.9-ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. இவற்றின் தாக்கத்தால், தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் நவம்பர் 9-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.