சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடனும், குற்றச் செயல்களில் ஈடுபடவும் வடமாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கும்பல் ஊடுருவியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமாக மேட்டூர், கொளத்தூர் சுற்றுவட்டார வனக் கிராமங்களில் காவல் துறை சார்பில் கிராம மக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. காவல் துறை வழங்கிய நோட்டீஸில் கூறியிருப்பதாவது: உங்கள் கிராமம், தோட்டத்து வீடுகள் அல்லது வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வடமாநிலத்தவர் அல்லது முன்பின் அறிமுகமில்லாத புதிய நபர்கள் தங்கியிருந்தாலோ, நடமாடினாலோ உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் விதமாகச் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் சுற்றித் திரிந்தாலும் உடனடியாகக் காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டால் நீங்களாக அணுக வேண்டாம். உடனடியாக, கொளத்தூர் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன்- 99767 11161, கொளத்தூர் காவல் நிலையம்: 94981 00997, தனிப்பிரிவு காவலர் மணிகண்டன்- 90805 82107 மற்றும் அவசர உதவி எண்: 100 / 112 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் வனப்பகுதியில் பவாரியா கும்பல் ஊடுருவியுள்ளதையடுத்து, வனக் கிராமங்களிலும், வனப்பகுதிகளிலும் போலீஸாருடன் இணைந்து வனத்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.














