சென்னையில் இன்று இந்தியன் ஓபன் தடகள போட்டி

0
32

தமிழக தடகள சங்கம் சார்பில் இந்தியன் ஓபன் தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (15-ம் தேதி) நடைபெறுகிறது. ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியான இதில் ஆடவர் பிரிவில் 14 நிகழ்வுகளும், மகளிர் பிரிவில் 14 நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன. சுமார் 400 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கும் போட்டி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேஷன் (400 மீட்டர் ஓட்டம்), வித்யா ராம்ராஜ் (200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம்), நித்யா ராம்ராஜ் (100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம்), பவித்ரா வெங்கடேஷன், பரணிகா இளங்கோவன், கவுதம், சிவா (போல்வால்ட்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியின் வாயிலாக வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ள 28-வது நேஷனல் ஃபெடரேஷன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கொச்சியில் நடைபெற உள்ள போட்டியில் இருந்து வரும் மே மாதம் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்புக்கு இந்திய அணி தேர்வு செய்யப்படும். இத்தகவலை தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளார் சி.லதா தெரிவித்துள்ளார்.

வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆபர்ன்டேல் நகரில் உலகக் கோப்பைவில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தருண்தீப் ராய், அட்டானுதாஸ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 1-5 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. அதேவேளையில் ஆடவருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் ஆன்ட்ரஸ் டெமினோ மீடியலை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தத் தொடரில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் கைப்பற்றி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here