பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC

0
60

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் – ஏ’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரை ஷாஹீன் ஷா அப்ரிடி வீசினார். அதில் 8 ரன்கள் எடுத்தார் ரோகித்.

அதன் பிறகு மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. நசீம் ஷா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 13 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரில் ரோகித் ஆட்டமிழந்தார். அவரை அப்ரிடி வெளியேற்றினார்.

பின்னர் அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்சர் 20 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா வெளியேற்றினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் 7 ரன்கள், ஷிவம் துபே 3 ரன்கள், ரிஷப் பந்த் 42 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா டக் அவுட் என 19 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.

120 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அணியின் கேப்டன் பாபர் அஸம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் இறங்கினர்.

இதில் பாபர் அஸம் 4வது ஓவரில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் நடையை கட்டினார். ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஸ்கோரை ஏற்றினார். பின்னர் 14வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து இறங்கிய உஸ்மான் கான், ஃபகார் ஜமான் தலா 13 ரன்கள், ஷதாப் கான் 4 ரன்கள், இஃப்திகார் அஹமத் 5 ரன்கள், இமாத் வாசிம் 15 ரன்கள் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் 120 ரன்கள் இலக்கை எட்டமுடியவில்லை. ஆட்டத்தின் முடிவில் அந்த அணி ஏழு விக்கெட்களுக்கு 113 ரன்களே எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஜஸ்மித் பும்ரா மொத்தம் 3 விக்கெட்களை எடுத்திருந்தார்.