கன்னியாகுமரிமாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சாலையில் தெரு நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டிப்பொட்டல் வைராவிளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). தச்சு தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் வைராவிளை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று, சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்தது.
பைக்கில் மோதிய தெரு நாயால் கட்டுப்பாட்டை இழந்த முருகேசன் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பொன்மலர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கின் குறுக்கே பாய்ந்த தெரு நாயால் அநியாயமாக உயிரிழந்த முருகேசனின் மனைவி பிள்ளைகள் நிர்கதியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
