ஆந்திராவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மீது ஒருதலையாக காதலித்த இளைஞர் ஆசிட் வீச்சு

0
34

ஒரு தலைபட்சமாக காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால், ஆத்திரமடைந்த காதலன், காதலர் தினமான நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார்.

திருப்பதியை அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டம், மதனபல்லி அம்மாசெருவு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பியாரம்பல்லி பகுதியை சேர்ந்த பியூட்டி பார்லரில் பணியாற்றும் ஒரு பெண்ணை ஒரு தலைபட்சமாக கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலை அந்த பெண் ஏற்றுககொள்ளவில்லை. ஆயினும் கணேஷ் அவரை விடாமல் பின்தொடர்ந்து காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு கடந்த 7-ம் தேதி உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி இவர்களுக்கு திருமணம் செய்ய பெரியோர்கள் தேதி குறித்துள்ளனர்.

இதனை அறிந்த கணேஷ், காதலர் தினமான நேற்று காலை 6 மணியளவில் தனது காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு காலையிலேயே அப்பெண்ணின் பெற்றோர் பணி நிமித்தமாக வயலுக்கு சென்றுள்ளனர். அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அந்த சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த கணேஷ், அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் அப்பெண்ணின் தலையில் சரமாரியாக வெட்டி, ஆசிட் பாட்டிலை திறந்து அப்பெண்ணின் முகத்தில் கொட்டி விட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடி வந்து, ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் அவர் மதனபல்லி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சைக அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மதனபல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணேஷை தேடி வருகின்றனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை: இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக உள்துறை அமைச்சர் அனிதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யும்படி உத்தரவிட்டார். இதுபோல் இனி ஒரு சம்பவம் நடக்காதவாறு அந்த தண்டனை இருக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்கும்படியும், அரசு அனைத்து விதத்திலும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உறுதுணையாக நிற்கும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here