காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம்…புல்வாமா ஹீரோக்களை நாம் கொண்டாடவேண்டாம் என்று பாட்னாவில் இந்து ஷிவ் பவானி சேவா அமைப்பினர் கோஷம் எழுப்பினர்.
நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிஹார் மாநிலம் பாட்னாவிலுள்ள பல்வேறு பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களில் ஆண்கள், பெண்கள் ஜோடியாக காதலர் தினத்தைக் கொண்டாடினர்.
அப்போது அங்கு வந்த இந்து ஷிவ் பவானி சேவா அமைப்பினர், “காதலர் தினத்தை நாம் கொண்டாட வேண்டாம். பொது இடங்களில், காதல் என்ற பெயரில் ஆபாசங்கள் பரப்புவதை நிறுத்துவோம். இன்று புல்வாமாவில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நினைவு தினமாகும். அந்த புல்வாமா ஹீரோக்களை நினைவுகூர்வோம். வாலன்டைன் நாள் (காதலர் தினம்) என்பது மேற்கத்திய கலாச்சாரம். எனவே, அதை நாம் கொண்டாடி மகிழக்கூடாது” என்று கோஷம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் நகரின் பல்வேறு பூங்காக்களுக்கு சென்று அங்கு கூடியிருந்தவர்களிடம் இதுபோன்ற கோஷங்களை எழுப்பினர். இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பஜ்ரங்தள், பாரதீய சுபி பவுண்டேஷன் அமைப்பினரும் கோஷங்களை எழுப்பி, காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தனர்.