மணிப்பூரில் கையில் துப்பாக்கியுடன் இளைஞர்கள் கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அந்த இளைஞர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில வைரலானது. ஏகே 74 மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எம் சீரிஸ் துப்பாக்கிகளை அந்த இளைஞர்கள் வைத்திருந்தனர். மேலும் ‘குகி மண்’ என்ற தலைப்பில் இந்த வீடியோ வெளியானது கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடியது மற்றும் இதன் வீடியோவை சமூக வலைதளங்களில் பரவச் செய்ததாக 5 இளைஞர்களை மணிப்பூர் போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் நேற்று கூறினர்.
21 முதல் 28 வரை வயதுடைய இந்த இளைஞர்கள் காங்போக்பி மாவட்டத்தின் கே.காம்னோம்பாய் கிராமமத்தை சேர்ந்தவர்கள். இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் இந்த வீடியோவில் காணப்படுவதாகவும் மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.