இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (3-ம் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விளையாடமல் இருந்திருந்தால் போட்டி ஒரு தலைபட்சமாக ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆன முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
பும்ரா என்னைப் பொறுத்தவரை கிளாஸான வீரர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தனித்துவமானவர். சூழ்நிலையை தகவமைத்துக் கொள்ளும் வழியைக் கண்டுபிடித்துள்ளார். கடைசி இரண்டு அடிகளில் அவர் அற்புதமான வலுவுடன் பந்து வீசுகிறார். பந்துவீச்சின் போது அவருக்கு முழங்கை கொஞ்சம் நீள்கிறது. இது எனக்கும் இருந்தது. அவர், அதை சமாளிக்கிறார். இரு வழிகளிலும் அவர், கட்டுப்பாடுடன் வீசுகிறார்.
பும்ராவின் புள்ளிவிவரங்கள் நம்பமுடியாதவை. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். அவர், இளமையாக இருந்தபோது நான் அவரை சந்தித்தேன், விளையாட்டில் அவர் வளர்ந்து வந்துள்ளது நம்பமுடியாதது. அவர், இந்திய அணியின் பெரிய அங்கமாக இருக்கிறார். அவர் இல்லாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இன்னும் கொஞ்சம் ஒருதலைப்பட்சமாக இருந்திருக்கும். இது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும். இவ்வாறு கிளென் மெக்ராத் கூறினார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பும்ரா இதுவரை 30 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார்.