“ஈரான் விரைந்து செயல்படாவிட்டால் எதுவும் மிஞ்சாது” – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

0
102

அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், “ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவாகச் செயல்படுவது நல்லது. இல்லையெனில் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது. இந்தத் தருணத்தில் காலம் மிக முக்கியமானது” என்று மிகக் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார். வாஷிங்டன் விதித்துள்ள நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்த சில மணி நேரங்களிலேயே டிரம்பின் இந்த பதிவு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள முதன்மை நிபந்தனைகளில், ஈரான் தங்களின் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், ஒரே ஒரு அணுசக்தி நிலையத்தை மட்டுமே இயக்க வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு எந்தவித இழப்பீடும் கேட்கக் கூடாது போன்றவை இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

ஆனால், இந்த நிபந்தனைகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள ஈரான், தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான தங்களின் அதிகாரத்தை அங்கீகரிக்க வேண்டும் எனப் பதிலுக்கு நிபந்தனை விதித்துள்ளது.

அண்மையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் இருதரப்புக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டது. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலராக உயர்ந்துள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானில் மீதமுள்ள 30 சதவீத இலக்குகளையும் அடுத்த இரு வாரங்களில் அமெரிக்க ராணுவம் முற்றிலும் அழித்துவிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளதால் மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here