இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படம் ‘டோரதி’. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் ஹீரோக்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் ஹைலைட் இளையராஜாவின் இசை! சமீபத்தில் வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் டிரெண்டிங்கில் இருக்கின்றன. செப்.25-ல் வெளியாக இருக்கும் இத்திரைப்படம் பற்றி கார்த்திக் சுப்புராஜிடம் பேசினோம்.
Q
டோரதி மதுரை கதையா?
A
இது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நான் எழுதிய ஸ்கிரிப்ட். இந்தக் கதையோட ஐடியா பல வருஷமா என் மனசுலயே இருந்துச்சு. கரோனா காலகட்டத்துல அதைத் திரைக்கதையா எழுத ஆரம்பிச்சேன். பிறகு தொடர்ந்து ஒரு ஆறேழு ‘டிராஃப்ட்’ வரை எழுதி முடிச்சேன். மதுரை பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல இருந்து வர்ற ரெண்டு பசங்க, அவங்க வாழ்க்கையில ‘டோரதி’ங்கற கேரக்டர் வர்றாங்க, பிறகு என்ன நடக்குதுன்னு கதை போகும்.
Q
ஆஸ்கர் விருது வாங்கிய குனீத் மோங்கா தயாரிச்சிருக்காங்களே?
A
ஆமா. இது நம் மண் சார்ந்த கதை. அதே நேரத்துல சர்வதேச பார்வையாளர்களுக்கும் நம்ம கதையை சொல்ற மாதிரி இருக்கும். இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா சார் படங்கள் எல்லாமே உலக சினிமாதான். அந்த மாதிரி பண்ணணும்னு நினைச்சு உருவாக்கப்பட்ட படம் இது. முதல்ல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு போயிட்டு, அப்புறமா தியேட்டருக்கு கொண்டு வரலாம்னு நினைச்சோம். அதுக்கு, இந்தக் கதையை புரிஞ்சுக்கிற சரியான தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்பதான் சிக்யா என்டர்டெயின்மென்ட் குனீத் மோங்கா வந்தாங்க.
அவங்க ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்துக்காக ஆஸ்கர் வாங்கியவங்க. அவங்களை கோவா சர்வதேச திரைப்பட விழாவுல சந்திச்சு பேசினப்ப, இந்த மாதிரி ஒரு கதை இருக்குன்னு சொன்னேன். கதையை படிச்சதுமே அவங்களுக்கு பிடிச்சு போயி பண்ணலாம்னு சொன்னாங்க. அப்படித்தான் ‘டோரதி’யோட பயணம் ஆரம்பமாச்சு.
இந்தப் படம் ஆரம்பிச்சதுல இருந்தே எனக்கு மட்டுமல்லாம, மொத்த டீமுக்கே ரொம்ப புத்துணர்ச்சியா இருந்துச்சு. ஏன்னா பட்ஜெட், படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே குறைவுதான். அதனால எந்த பதற்றமும் இல்லாம, பயங்கரமான எனர்ஜியோட இதைப் பண்ணியிருக்கோம். செப். 11-ம் தேதி டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவுல இந்தப் படம் பிரீமியர் ஆகுது.
Q
வழக்கமா பெரிய ஹீரோக்களை வச்சுதான் படம் பண்ணுவீங்க?
A
இதுக்கு முன்னால ரஜினி சார், தனுஷ், விக்ரம் கூட படம் பண்ணியிருந்தாலும் அந்த ‘ஃபார்மட்’ல இல்லாம ஒரு சுயாதீன படம் மாதிரி இதை இயக்கலாம்னு இருந்தேன். முதல்ல ‘மகான்’ முடிஞ்சதும் இதை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அந்த நேரத்துல ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ ஆரம்பிச்சோம். அதை முடிச்சுட்டு இதைப் பண்ணலாம்னு நினைச்சா, சூர்யா சாரோட ‘ரெட்ரோ’ பண்ண போயிட்டேன். இனிமே இதை பண்ணாம விட்டுட்டோம்னா, என்னைக்குமே முடியாம போயிடும்னு முடிவெடுத்து உடனே இந்தப் படத்தை ஆரம்பிச்சேன்.
இது 90-கள்ல நடக்குற கதை. இந்தக் கதைக்கு பெரிய ஹீரோக்கள் தேவைப்படலை. இதுல நடிச்சிருக்கிற சனந்த் என்னோட ‘மெர்க்குரி’, ‘பேட்ட’, ‘மகான்’ படங்கள்ல நடிச்சிருக்கார். இதுல ரெண்டு முதன்மை பாத்திரங்கள்ல ஒருத்தரா நடிச்சிருக்கார். இன்னொரு கேரக்டருக்கு ஆடிஷன் பண்ணி, எடுக்கலாம்னு நினைச்சோம். ரிஷிகாந்த் நடிச்ச சில குறும்படங்கள் பார்த்திருக்கேன். ஆடிஷன் பண்ணி பார்த்ததும் டீம்ல எல்லோருக்கும் பிடிச்சது. இவங்க ரெண்டு பேரும் நிஜத்துலயும் நண்பர்கள். சூப்பரா நடிச்சிருக்காங்க. கீர்த்தி சுரேஷ், டோரதி கேரக்டர் பண்ணியிருக்காங்க.
Q
இளையராஜா சார் இசையில வெளியான 2 பாடல்களும் ஹிட்டாகியிருக்கு…
A
இந்தக் கதைக்கு ராஜா சார் இசை அமைக்கணுங்கறதுதான் என்னோட பயங்கரமான கனவா இருந்துச்சு. இந்தக் கதையோட ‘பிட்ச் டெக்’ ரெடி பண்ணும்போதே, இசை இளையராஜான்னு போட்டுதான் வச்சிருந்தேன். இதுக்கு முன்னால பண்ணிய படங்களுக்கு கூட அவர் இசை அமைக்கணும்னு ஆசையா இருந்தது. ஆனா, அவர்கிட்ட போறதுக்கு பயம் இருந்துச்சு. அவ்வளவு பெரிய லெஜண்ட், அவர்ட்ட போயி எனக்கு மியூசிக் பண்ணுங்கன்னு கேட்கறதை ஏதோ ஒண்ணு தடுத்துச்சு. இந்தப் படத்தை முடிச்சுட்டு, ‘இப்படியொரு படம் பண்ணியிருக்கேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா, மியூசிக் பண்ணிக் கொடுங்க’ன்னு கேட்டேன்.
அவர் படத்தைப் பார்த்துட்டு, ‘நாளைக்கு காலைல 8 மணிக்கு வந்துருங்க, ஸ்டார்ட் பண்ணிரலாம்’னு சொன்னார். அதுல இருந்து அடுத்த 25 நாள் தொடர்ந்து இந்தப் படத்துக்கு இசை அமைச்சார். அவர் கூட இருந்த அந்த 25 நாட்களும் எனக்கு நிஜமா, கனவான்னு தெரியாத ஓர் உணர்வு ஏற்பட்டது. அது பெரிய அனுபவம். சினிமாங்கற கலைக்குள்ள அவர் அளவுக்கு யாரும் இல்லைங்கற மாதிரி எனக்கு தெரிஞ்சது. ராஜா சார் குரலை, ஒரு தெய்வத்தின் குரலா பார்க்கிறேன். அவர் இந்தப் படத்துல ‘கல்யாண விருந்து’ பாடலை பாட ஆரம்பிச்சதும் அதுவே புல்லரிச்சது. அவர்கிட்ட அதை மியூசிக் வீடியோவா பண்ணலாமா?ன்னு கேட்டதும் உடனே ஓகே சொன்னார். அப்படித்தான் அந்த ஆல்பத்தை வெளியிட்டோம். அதுக்கு நல்ல வரவேற்பு.
Q
‘லைவ் சவுண்ட்’ பண்ணியிருக்கீங்கன்னு சொன்னாங்களே?
A
1990-கள்ல மதுரை பின்னணியில நடக்குற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அன்றைய காலத்து மனிதர்களையும் அவங்களோட வாழ்க்கையையும் ரொம்ப இயல்பாகப் படமாக்கியிருக்கோம். எந்த டிரெண்டுக்காகவும் எதுவும் பண்ணல.
ஆனா, ஒவ்வொரு படத்துலயும் ஷாட்ல இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கோம். இந்தப் படத்துலயும் அப்படி கத்துக்க முடிஞ்சது. பார்வையாளர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தை இந்தப் படம் தரும். லைவ் சவுண்ட் பண்ணியிருக்கோம். தியேட்டர்ல பார்க்கும்போது நிறைவான அனுபவம் கிடைக்கும்.
Q
ரிலீஸுக்கு முன்னாலயே பின்னணி இசையை தனி ஆல்பமா வெளியிட்டுருக்கீங்களே?
A
இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே, பின்னணி இசையை தனி ஆல்பமா வெளியிடலாம்னு ராஜா சார் சொன்னார். அதனால அதை வெளியிட்டிருக்கோம். இதுக்கு முன்னால ரிலீஸுக்கு முன்னாலயே இப்படி வெளியிட்டிருக்காங்களான்னு தெரியல. இதைக் கேட்டுட்டு படம் பார்க்கும்போது, அந்த அனுபவம் வேற மாதிரி இருக்கும்னு நம்பறேன்.















