சாண்ட்பேப்பர் விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் குறித்த பெரும் சர்ச்சைகளை கவாஜாவின் புத்தகம் மூலம் மீண்டும் தூசித் தட்டி கிளப்பிவிட இந்த ஒட்டுமொத்த சர்ச்சையின் பின்புலமாக இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ், ‘உஸ்மான் கவாஜா போல் ஒரு துரோகியை நான் கிரிக்கெட்டில் இதுவரை கண்டதில்லை’ என்று காட்டமாகத் தாக்கியுள்ளார்.
ஃபானி டிவில்லியர்ஸ் ஒரு சேனலுக்காக பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் இந்த ‘சாண்ட்பேப்பர்’ விவகாரத்தையே வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் என்ற வகையில் இந்த ஒட்டுமொத்த சர்ச்சையின் மூலகர்த்தாவே இவர் தான்.
ஆனால் இப்போது இவர் கூறுவதாவது: “நான் 40-50 ஆண்டுகளாக கிரிக்கெட்டைப் பார்த்து வருகிறேன். ஆனால் உஸ்மான் கவாஜா போல் மிகப்பெரிய துரோகியை நான் கிரிக்கெட்டில் பார்த்ததில்லை. ஒவ்வொரு நடத்தை விதியையும் மீறியுள்ளார் கவாஜா. தன் சகவீரர்களைக் காட்டிக் கொடுத்த துரோகி ஆகி விட்டார். இது சரி அல்லது தவறு என்பது பற்றியல்ல, தவறு ஏற்கெனவே சரியான முறையில் கையாளப்பட்டுவிட்டது. அது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஒரு அங்கமாகவும் ஆகிவிட்டது, ஆனால் அப்படி நிகழ்ந்தது பெரும் துயரமே.
நடந்தது நடந்து விட்டது, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டும் அதிலிருந்து வெளியேறி வந்து விட்டது. ஆனால் இந்தக் கவாஜா மீண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை தலைகுனியச் செய்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மரியாதையை இழக்கச் செய்துள்ளார். நட்பார்ந்த ஒரு சூழலின் நடத்தை விதிமுறைகளை உடைத்தெறிந்துள்ளார் கவாஜா. தவறு என்று நாம் எதையெல்லாம் நினைக்கிறோமோ அனைத்தையும் செய்து விட்டார் கவாஜா. ” என்றார் ஃபானி டிவில்லியர்ஸ்.
தனது கிரிக்கெட் சுயசரிதை நூலில் உஸ்மான் கவாஜா, 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தொடரில் நிகழ்ந்த பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் மட்டுமல்ல அனைவருக்குமே தொடர்பு உண்டு, அனைவரும் பயிற்சியாளர்கள் உட்பட உப்புக் காகிதம் தேய்ப்பதை அறிந்திருந்தார்கள் என்று ஒரு புதியக் குண்டைத் தூக்கிப் போட கவாஜாவுக்கு வார்னர், பேங்கிராப்ட் தரப்பில் ஆதரவு பெருக, பாட் கமின்ஸ் அதனை மறுத்து பெரிய பேட்டி ஒன்று அளிக்க, மற்ற வீரர்களும் கவாஜாவை மறுத்துள்ளனர்.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இது குறித்து அனைத்து வீரர்களும் தாங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லலாம் என்றும் டேவிட் பூன் மூலம் அறிவித்துள்ளது.
இந்த ஒட்டுமொத்த சர்ச்சைகள் தொடர்பாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கூறும்போது, “கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தீவிரமாக விரும்பும் என்று நினைக்கிறேன். உண்மையில், கம்மின்ஸ் தனது செய்தியாளர் சந்திப்பில், இதைப் பற்றிப் பேசுவது இதுவே கடைசி முறை என்று கூறியிருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நடந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டால் அடுத்த சில வாரங்களில் வேறு யாராவது கூட இது குறித்துப் பேசக்கூடும். எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் துரதிர்ஷ்டவசமாக, இந்த விவகாரத்தில் முழு உண்மையும் ஒருபோதும் வெளிவராது என்றே நான் கருதுகிறேன்.” என்று கூறியுள்ளார்.














