ஃபிளை துபாய் விமானத்தில் பயணம் செய்த ஜார்ஜியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் ஷோட்டா முசாயேவ் சுமார் 45 நிமிடங்கள் இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினார்.
இதுகுறித்து ஷோட்டா முசாயேவ் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய பைலட் மச்சாருக்கு தலையிலும் இடது கையிலும் கடுமையான ரத்தக்கசிவு இருந்தது. காயங்களின் மீது அழுத்தம் கொடுத்து ரத்தக்கசிவை கட்டுப்படுத்த முதலில் டி-ஷர்ட்களை பயன்படுத்தினேன். ஒவ்வொரு முறையும் டி-ஷர்ட்டை அகற்றி காயத்தைப் பார்த்தபோது மீண்டும் அதிகமாக ரத்தம் வெளியேறியது.
எனவே மெதுவாக அழுத்தம் கொடுத்து, காயத்தில் ஐஸ் கட்டிகள் வைத்து கவனித்தேன். மச்சார் மயக்கமடையாமல் இருக்க அவருடன் தொடர்ந்து பேசினேன். அவர் என்னிடம் ‘தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நான் இங்கே இறக்க விரும்பவில்லை’ என்று கூறினார். ஒரு கட்டத்தில் அவரது நாடித்துடிப்பு மிகவும் குறைந்தது. அதனால் அவரது கால்களை உயர்த்தி வைத்தேன். அதன் பிறகு நாடித்துடிப்பு மீண்டும் சீரானது.
மேலும் கவலைக்குரிய ஒரு அறிகுறியாக மச்சாரின் உதடுகள் நீல நிறமாக மாறின. அதைப் பார்த்ததும், விமானப் பணியாளரிடம் ‘நாம் உடனடியாக தரையிறங்க வேண்டும்’ என்று சொன்னேன். மச்சார் வலி நிவாரண மாத்திரை கேட்டார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.
சுமார் 45 நிமிடங்கள் மச்சாரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தேன். விமானம் தரையிறங்கிய பிறகு மச்சாரை அங்கிருந்த மருத்துவர்களிடம் ஒப்படைத்தேன். ‘குட் லக், என் நண்பரே. எல்லாம் நன்றாக நடக்கும்’ என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறி அவரை அனுப்பி வைத்தேன். இவ்வாறு ஷோட்டா முசாயேவ் கூறினார்.
