அமெரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி ஓய்வுபெற்ற இந்தியர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் ரூ.4 கோடியை இழந்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த அதுல் தல்வார், அமெரிக்காவின் நியூயார்க்கில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அங்கிருந்து தாயகம் திரும்பிய அவர், குருகிராமில் தனது சகோதரருடன் தங்கியிருந்தார். அக்டோபர் 17 அன்று மும்பை கொலாபா காவல் நிலைய அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய நபர் அதுல் தல்வாரிடம் ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கில் உங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
உங்கள் அடையாள அட்டை விவரங்களைப் பயன்படுத்தி தொடங்கப்பட்ட கனரா வங்கிக் கணக்கு மூலம் ரூ.53 கோடி மாற்றப்பட்டுள்ளது, இதன்மூலம் ரூ.5 கோடி கமிஷன் பெற்றிருக்கிறீர்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தல்வார் இதை மறுத்தபோது, தொலைபேசியில் இருந்த மற்றொருவர் அவரைக் கைது செய்யப் போவதாக மிரட்டிஉள்ளார்.
தொடர்ந்து, சிபிஐ உதவி இயக்குநர் என்ற பெயரில் ஒரு ரகசிய கடிதத்தை வாட்ஸ்அப் மூலம் அவருக்கு அனுப்பியுள்ளனர். பின்னர், அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி உள்ளனர். மேலும் தல்வாரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று அவர் வைத்திருந்த சுமார் 3,80,000 டாலரை பணமாக மாற்றி தாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளனர். விசாரணை முடிந்ததும் பணம் திருப்பித் தரப்படும் என்று மோசடியாளர்கள் அவருக்கு உறுதியளித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, வரி செலுத்துதல் என்ற பெயரில் சுமார் ரூ.1.5 கோடியும், எத்தேரியம் கிரிப்டோகரன்சி வடிவில் கிட்டத்தட்ட ரூ.2.5 கோடியும் மாற்றப்பட்டுள்ளன. நவம்பர் 7-க்குள், பாதிக்கப்பட்டவர் கிட்டத்தட்ட ரூ.4 கோடியை இழந்திருந்தார். நவம்பர் 7-ம் தேதிக்குள் பணம் திரும்பக் கிடைக்காததால், தல்வாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன்பிறகு எதிர்தரப்பினர் அவருடன் தொடர்புகொள்வதை நிறுத்தினர்.
இதையடுத்து, தல்வார் கவுதம் புத் நகரில் உள்ள சைபர் குற்றக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நியூயார்க் சென்று், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பிடமும் (எப்பிஐ) புகார் அளித்துள்ளார்.
