ஹார்முஸ் ஜலசந்தியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற எல்பிஜி கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 2 மாலுமிகள் காயமடைந்தனர். மேலும், ஒரு மாலுமி மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நேற்றுமுன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியில் பனாமா நாட்டுக் கொடியுடன் பயணித்த ‘எம்டிதாரா கேஸ்’ என்ற எல்பிஜி கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 2 இந்திய மாலுமிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இந்திய மாலுமி மாயமாகியுள்ளார். கப்பலில் இருந்த 21 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டு கசாப் கடற்கரைப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மாயமான மாலுமியை தேடும் மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மீட்புப் பணிகளில் உரிய நேரத்தில் உதவிகளையும், ஆதரவையும் வழங்கிய ஓமன் அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்தப் பிராந்தியத்தில் கப்பல்கள் தொடர்ந்து தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. இது சர்வதேச கடல் வழிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, சர்வதேச கடல் வழிகளில் தடையற்ற கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
