இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா விலக்கு சலுகையை 2027-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் நிறுத்த மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலாவை மேம்படுத்த, இந்தியர்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கும் சலுகையை மலேசியா அரசு 2023 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மலேசியா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. ஆனால், இந்தச் சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், மலேசிய குடியேற்றத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2027 ஜனவரி 1-ம் தேதி முதல் இந்தியர்களுக்கு விசா விலக்கு சலுகை கிடையாது. மலேசியா வரும் இந்தியர்கள், பயணத்துக்கு முன்பாகவே முறையான விசா பெற்றிருக்க வேண்டும். இதற்கான விசா விண்ணப்பங்களை 2026 டிசம்பர் 1-ம் தேதி முதல் ‘MyVISA’ இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம்.
அதற்காக செலுத்தப்படும் கட்டணங்கள், விசா நிராகரிக்கப்பட்டாலோ அல்லது எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படாது. சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
