ஹைப்பர் லூப் திட்டத்துக்கான மின்னணு தொழில்நுட்பம் அனைத்தும் சென்னை ஐ.சி.எஃப்-ல் மேம்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
விமானத்தைவிட வேகமாக, நிலத்தில் செல்லும் அதிவேக போக்குவரத்து அமைப்பாக உருவெடுக்க உள்ள ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் குறித்து, பல்வேறு நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ரயில்வே துறை நிதியுதவியுடன் சென்னை ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தையூரில் உள்ள டிஸ்கவரி சைட்டிலைட் வளாகத்தில் அமைந்துள்ள ஹைப்பர்லூப் சோதனை வசதியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையி்டடார். அமைச்சருக்கு ஹைப்பர்லூப் செயல்படுவது பற்றிய செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை ஐஐடி உதவியுடன் உருவாக்கப்படும் இது, ஆசியாவிலேயே மிக நீண்ட ஹைப்பர்லூப் சோதனை அமைப்பு ஆகும். இது 410 மீட்டர் நீளம் கொண்டது. ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான சோதனை அமைப்பு முழுவதும் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
தற்போது வளர்ந்துவரும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பம், இதுவரையிலான சோதனைகளில் நல்ல பலன்களைத் தந்துள்ளது. விரைவில் ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கு இந்தியா தயாராகிவிடும். இதுவரை மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் ஹைப்பர்லூப் திட்டத்துக்கு நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் வழங்கி வந்தது. தற்போது இந்த ஹைப்பர்லூப் திட்டத்தின் மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) தொழில்நுட்பம் முழுவதும் சென்னை ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்.
ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் திறமையான வல்லுநர்கள் வந்தேபாரத் அதிவிரைவு ரயில்களுக்கான பெரிய சவாலான அதிக திறனுள்ள எலக்ட்ரானிக்ஸ் அமைப்புகளை திறம்பட மேம்படுத்தியுள்ளனர். இந்த ஹைப்பர்லூப் திட்டத்துக்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பமும் ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஐஐடி சென்னையின் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும், அவிஷ்கர் நிறுவனத்துக்கும் அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார்.
பின்னர் கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்துக்கு வந்த அமைச்சர், அங்கு ஐஐடி-ன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் சார்பில் நடைபெற்ற கண்காட்சியை பார்வையிட்டார். அங்குள்ள மாணவர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது, அமைச்சர் பேசும்போது, “பிரதமர் மோடி தலைமையில் அனைத்து துறைகளிலும் முன்னணி நாடாக விளங்கும் வகையில் இந்தியா செயல்படுகிறது. தரவு அறிவியல், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (செமி கன்டக்டர்) ஆகிய துறைகளில் நமது இளைஞர்கள் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். உலகிலேயே இந்தியாவில்தான் திறமையான இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பெரிதும் பங்காற்றுவார்கள். இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரான முதலாவது செமி கண்டக்டர் (குறைக்கடத்தி) பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.
கண்காட்சியில் இடம்பெற்ற கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுக் கேடயங்களை வழங்கி, மேலும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஊக்கமளித்தார். இந்நிகழ்ச்சியின்போது சென்னை ஐஐடி இயக்குநர் காமகோட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.